Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கட்டாடியார் தணிகாசலம்

1 comment

2000 ஆம் ஆண்டுகளில் சில நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துக்கொண்டு போவார் தணிகாசலம். அதற்காகவே பிரத்தியேகமா எங்கள் வீட்டில் ஒரு பிரப்பம் கூடை ஒன்று இருந்தது. அழுக்குத் துணிகளை எல்லாம் அதில் போட்டு வைப்போம். குறித்த நாளில் அவர் வந்ததும் கூடையில் இருக்கும் துணிகளை கீழே கொட்டிவிட அவர் எண்ண ஆரம்பிப்பார்.

வேஷ்டி ஒன்று, சாரம் இரண்டு, சேலை நான்கு. பள்ளிக்கூட காற்சட்டை இரண்டு. சட்டை இரண்டு, பெட்சீட் ஐந்து. ஆக மொத்தம் எத்தனை உள்ளது என்று எண்ணி உருப்படிக் கணக்கு சொல்லுவார். அம்மா அதை குறித்துக் கொள்ளுவார். சில இடங்களில் அவர்களும் கொப்பிகளிலும் எழுதி வைத்துக் கொள்ளுவார்கள்.

துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி, சைக்கிள் காரியரில் வைத்து கட்டி குளத்துக்கோ, நீர்த்தேக்கங்களுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார். வெளுத்தல் என்பது இப்போது சொற்களில் கூட இல்லாமல் போய்விட்டது. ஊத்தைச் சோடா, சவக்காரம் போட்டு, வெள்ளாவி வைத்து வெளுத்து கொள்வார்கள், வெள்ளாவி என்றால் ஆடைகளை போட்டு அவித்து அதனை சூடு நீர் அல்லது நீராவியில் சுத்தம் செய்வது. அது லாலா சோப், மில்க்வைற்போன்றன இருந்த காலம். 

அப்போது லாலா சோப்பில் காசு வரும். காசு சேர்த்து அந்த காசில் காசு எண்ண பழகிய சந்தோஷங்களும் இருக்கும். காசினை சேர்க்க சின்னவயசில அந்த சோப்பை வாங்கியது பலபேருக்கு நினைவில் இப்போது வரக் கூடும்.



குள கரையோரங்களில் நிரை நிரையாக துணி சலவை செய்வோர் உருவாக்கி வைத்திருக்கும் பெரிய சலவைக்கற்களில் ஆடைகளை அடித்துத் துவைத்து, பின் அருகே மூன்று தடிகளை கோர்த்துக்கட்டி வைத்திருக்கும் அமைப்பில் தோய்த்தவற்றை போடுவார்கள்.

பெரும்பாலும் வெள்ளைத் துணி, பள்ளிக்கூட சேட்டுகளுக்கு நீலம் போடுவார், நீல பவுடர் பைக்கற்றுகளில் வரும். நீலம் போடாத வெள்ளை ஆடைகள் ஒரு பழுப்பு நிறமாக இருக்கும். அதனால் நீலம் போடுவது வளமையாகிப்போனது. வேறு சில ஆடைகளுக்கு கஞ்சிபோட்டு காச்சி அங்கே இருக்கும் வேலிகள், செடிகளின் மேல், அல்லது கொடிகளை கட்டி வெயிலில் காயப்பபோடுவார். கலர் கலராக துணிகள் காயும் போது குளத்துக்கு வெளியேயும் தாமரைகள் பூத்தது போல இருக்கும். அந்த இடம்.


 பின்னர் ஈரம் காய்ந்தபின்னர் எல்லா துணிகளையும் அள்ளிக் கட்டி. மூட்டையாக தனது வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார், இதில் அவரின் வாடிக்கையாளர் எல்லோரின் உடுப்புக்களும் அடங்கும். அதன் பின் அயன் போட்டு அந்தந்த வீட்டுத் துணிகளை பிரித்து அவற்றில் தான் மையைக் கொண்டு ஏற்கனவே போட்ட குறிகளைப் பார்த்து தனித் தனியாக அடுக்கி, கட்டி வீடுகளுக்கு மீண்டும் கொண்டுவந்து தருவார். நாங்களும் பணம் கொடுத்து அவற்றை பெற்றுக்கொள்வோம்.

அந்த ஆடைகளை அடுத்த நாள் பாடசாலைக்கு உடுத்திச்செல்லும் போது, சேட் மடக்கு மடக்கு என்று நிற்கும், கிழிந்து டான் பண்ணி வைத்திருந்தாலும் நீலம்போட்ட வெள்ளைச்சேட்டும், சட்டையும் உண்மையில் அழகாகத் தான் இருக்கும். அந்த நீலப் பவுடர்வாசனை எனக்கு அந்த நாட்களில் போதை என்றும் சொல்லாம். 

சில நேரங்களில் அவிக்கும் போது சில ஆடைகளின் சாயம் வெள்ளைத்துணிகளில் படிந்துவிடும். அடித்து தோய்க்கும் போது சில ஆடைகள் கிழிந்தும் விடும். அது தான் இதில் அவர்களுக்கு இழப்பு. ஆனாலும் தரும்போதே சொல்லித்தான் தருவார்கள் ஏமாற்ற மாட்டார்கள்.

எங்களின் காலத்தில் பணம் கொடுக்கும் கலாசாரம் இருந்தது, ஆனால் தாத்தா பாட்டி காலத்தில் அவர்களின் கூலி தானியங்களும் நெல், காய்கறிகளுமாக இருந்துள்ளது. எங்கள் ஊரில் உரிமைப்பங்கு என்று ஓரு விடையம் இருந்தது. அந்த ஊர் வீடுகளில் அவர்கள் தான் எல்லாவற்றுக்கும் முன்நிற்பார்கள். திருமணம் போன்ற நல்ல நாட்கள், மரண வீடுகளுகளில் அவர்களுக்கும் என்று உணவு, பொருட்கள் கொடுப்பார்களாம். முன்பு வேறுபட்ட முன்று சமூகத்தினருக்கு  அந்த பங்கு கிடைக்கும். இப்போது அந்த வழக்கம் நலிவடைந்துவிட்டது. அவர்களும் வருவதில்லை.

அந்நாட்களில் வெள்ளை கட்டுதல் என்று ஆரம்பமாகும் அவர்களின் வேலை, வெள்ளைகட்டுதல் என்றால் அவர்கள் மரண வீடுகளில் சவம் வைத்திருக்கும் இடத்திற்கு மேல், கிரிகைகள் நடைபெறும் இடம், சமையல் நடைபெறும் இடத்திக்குமேல் வெண்ணிற துணிகளை கட்டுவார். அதுபோல எல்லாசுப நிகழ்வுகளுக்கும் அவ்வாறு  முன்னின்று செய்வார்கள். அது நம்பிக்கையாக இருந்தாலும், முன்பு எங்கள் வீடுகள் கிடுக்குகளினாலும், பனை ஓலைகளினாலும் வேயப்பட்டிருக்கும், அதனால் மேல் இருந்து தூசுகள், பூச்சிகள் என்பன விழுந்துவிடாமல் இருக்க இதை ஆர்மபித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அது கல்வீடு ஆனபின்னும் தொடர்கிறது.

அவர்களின் வேலைகள் அந்த விழாக்காலங்களில் முழுமையாக இருக்கும். கட்டாடிட்ட சொல்லிவிடுங்கோ, அல்லது கட்டாடி வரவேணும் என்று அவர்களுக்காகவே பார்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் வருவதில்லை, நாங்களே வேட்டியை எடுத்து மேலே கட்டி விடுவோம்.  

இந்த தொழில் சாதி ரீதியாக வகைப்படுத்தப்பட்டதால். நாட்கள் செல்ல குறைய தொடங்கி விட்டது. அவர்களினை ஏனையவர்கள் வைத்திருக்கும் நிலை அவ்வாறானதாக இருக்கும். சில இடங்களில் கோவிலின் வெளிவீதி, சில இடங்களில் உள்வீதி, வீடுகளில் திண்ணை இவ்வாறு இருக்கும் போது அவர்கள் அந்த அடையாளத்தை விலக்கிவிடத்தான் நினைப்பார்கள். ஆனாலும் அவர்கள் தங்களுக்கு மேல்சாதியினரின் ஆடைகள் மட்டும் தான் தோய்ப்பார்களாம். இந்த சாதி அமைப்புமுறை அவர்களுக்குள்ளும் இன்னொரு பரிமாணத்தில் உள்ளது.

குளம் கால்வாய்களில் தோய்ப்பது போய் கிணறுகளில் தோய்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று காலநிலை மாற்றங்களால் குளத்தின் நீர் வற்றிப்போகின்றமை. மற்றையது தங்கள் முகங்களை மறைக்கமுயல்கின்றமை. அவர்கள் முன்பு தோய்த்த குளங்கள் வண்ணாங் குளம் என்று அநேகமான ஊர்களில் அழைக்கப்படுகின்றன. அந்த குளங்களில் சில இப்போது தூர்ந்துபோய்விட்டன, குப்பைகளால் நிறைந்தும் இருக்கின்றன. இன்னமும் சில ஊர்களில் இருக்கின்றன. சில தண்ணீருடன். சில பெயரளவில் மாத்திரம். அவற்றை தூர்வார்ந்து பாவனைக்கு மாற்றும் எண்ணமும் அரசிடமோ, அதனை முன்மொழியம் எண்ணம் மக்கள் பிரதிநிதிகளிடமோ இல்லை. இப்போது குளத்தில் தோய்ப்பதும் சுகாதாரமாக இருக்காது என்பதும் ஒரு உண்மை.

வயதான ஐயா ஒருவர் குளங்களில் தோய்க்கவருவார், அவருடன் கதைப்பதற்காக மணிக்கணக்காக காத்திருந்தேன், நேரம் பொழுதாகியும் அவர் வரவே இல்லை, அந்த குளத்தில் இனி தோய்க்க முடியாது போனதாக இருக்கலாம். அல்லது அவர் தொழில் செய்வதை நிறுத்தி இருக்கலாம்.

பின்னாட்களில் தணிகாசலம் வருவதில்லை, பின்னர் ஆங்காங்கே லோன்றிக்கடைகள் முளைத்து வந்துவிட்டன. அவர்கள் தங்களுக்கு என்று சங்கங்கள், சட்டதிட்டங்களை உருவாக்கினார்கள்.


அயன் பண்ணிய உடுப்புக்களை நெர்த்தியாக மடித்து ஒழுங்காக அடுக்கி வைக்க அலுமாரி அல்லது துணிவைக்கும் ராக்கை, ஒரு மேசை, அதில் சிரட்டைக் கரி சுட்டு, சூடேற்றி உடுப்புக்களை அயன் செய்ய பாவிக்கும் இரும்பு கரி அயன்பொக்ஸ் அங்கே இருக்கும். துணிகளை கொண்டு போய் கொடுக்கவேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களின் பின்தான் கிடைக்கும். எப்போது எடுக்கலாம் என்று எழுதி விலைச் சிட்டை எழுதித் தருவார், மையால் போடும் அடையாளங்களுக்கு பதிலாக ஸ்டிக்கர் ஓட்ட ஆரம்பித்தார்கள்.விலைச் சிட்டை கொண்டு சில நேரங்களில் இரண்டு மூன்று நாட்களும் அலையவேண்டும்,

நாட்களும் செல்ல செல்ல அந்த "கரி அயன்பொக்ஸ்" வீடுகளை அடைய தொடங்கியது. தேங்காய் சிரட்டை கரிகளை தயாரித்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாங்களும் சலவைக்காரராக மாறிக்கொண்டிருந்தோம்,

கரி அயன் பொக்சில் அயன் பண்ணும் போது கரி பிரள்வதாலும், இலகுவில் அயன் பண்ணக்கூடியவாறு மின் அழுத்திகள் அறிமுகப் படுத்தப்பட்டதாலும் இவற்றின் தேவைகள் குறைய ஆரம்பித்தது. இப்போது வீட்டிலேயே துவைத்த துணியை நாமே அயன் பண்ணிக்கொள்ளும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம், எப்போதாவது கயர் பிடித்த ஆடைகளை கொண்டு போய் கொடுக்கிறோம். இப்படியே தொடருமானால் இன்னும் ஆங்காங்கே இருக்கும் சலவைக்கடைகளையும் சிறிது காலத்தில் பூட்டி விடுவார்கள். ஆனாலும் அவர்களின் நேர்த்தி இன்னும் எம் கைகளுக்கு அமையவில்லை.

அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து கல்வி கற்று, சமூக அந்தஸ்து காரணமாக பெற்றோர்களை வீடுகளில் அமர்த்துகிறார்கள். அது ஒன்றும் பிழை என்று சொல்ல முடியாது. ஏன் எனில் எங்கள் சமூகத்தின் சாபங்களில் ஒன்று இந்த சாதியம். அதன் வீரியம் குறையும் நாட்களில்  எல்லாம் அல்லது எல்லோரும் ஒன்றென்பது புலனாகும்.

தணிகாசலத்தின் பிள்ளைகள் படித்திருப்பார்கள், ஏதாவது பெரிய வேலைகளிலும் இருக்ககூடும். இந்த தலைமுறையின் பின் லோன்றிக்கடைகளும் இருக்காது. அவர்கள் தங்களுக்கான எதிர்கால திட்டங்களை வகுத்துவைத்துள்ளார்கள்.

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

  1. Anonymous8:17:00 pm

    At each of its fabrication crops, the company 3D-prints and injection-molds components for industrial use and shortly ships them off. Its partnership with UPS, paired with the company’s distributed structure, means it can possibly} often offer next-day supply, even on customized builds. The idea dates back to the early ‘80s, when Dr. high precision machining Hideo Kodama almost patented it in Japan. Due to a bureaucratic issue, although, Kodama’s patent by no means went via. Consequently, credit score for 3D printing usually goes to Charles Hull, an American engineer who founded 3D Systems, the original 3D printing company, back in 1986.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா