Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காயும் பழமும், அவுட் அவுட்...

5 comments

என்னடா இது காயும் பழமும் எண்டு சொல்லுறன் எண்டு நீங்கள் நினைக்கிறது விளங்குது. பழக்கடைக்கு போன கதை ஏதும் சொல்லப்போறானோ எண்டு யோசிக்காதையுங்கோ, இது எங்களுடைய பாரம்பரிய, நாங்கள் மறந்த விளையாட்டு ஒன்றைப் பற்றின கதை தான் இது.

பழைய ஆக்களுக்கு தெரியும் காய் பழம் எண்டா என்ன விளையாட்டா இருக்கும், அதை எப்படி விளையாடுறது எண்டு. ஆனால் உவை சின்னவைக்கு விளங்காது, நீங்கள் இத வாசிக்கும் போது, உங்கட வீடுகளில அவையள் இப்ப உந்த ஐப்பாட்லயும், கலக்சி நோட்டிலையும் கேம் விளையாடிக்கொண்டிருப்பினம். கண்டம் விட்டு கண்டம் தாண்டி மச் போடுவினம். அற்ராக் பண்ணுவினம். ஆனால் முந்திமாரி பக்கத்துவீட்டுகாரனோட சேர்ந்து விளையாட மாட்டினம். அது அவையின்ர பிழை இல்லை, அப்பா அம்மாவின்ர ஸ்ரேற்றஸ் பிரச்சனைல இதுகளை சொல்லமறந்துபோயிருப்பினம், பிறகு வளர்ந்து பாக்கும் போதாவது தெரியட்டும் என்று தான் இப்ப சொல்லுறன்.

உந்த ஸ்கொலசிப் வரை எனக்கு தெரிஞ்சது ஒளிச்சுப்பிடிச்சும், குளம் கரையும், குலைகுலையா முந்திரிக்காயும் மட்டும் என்று தான் நினைக்கிறன். இப்பத்தே பிள்ளையளுன்ர கல்வி முறைல இது எண்டாலும் தெரியுமோ தெரியாது. பாட்டு வகுப்புக்கும், சிங்கள வகுப்புக்கும் போகத்தான் நேரம். அது வேற கதை. சரி அதை விடுவம். இப்ப கதைக்கு வருவம்,

நாங்கள் கிராமத்தில வாழ்ந்த  அந்த இரண்டு வருடங்கள், சிவப்பு மண்வாசம், பனையோலைக்காற்றின் சத்தம், நூங்கின் சுவை. தோட்டம், அலம்பல் வேலி,  மண்வீடு, வெள்ளைமா புட்டு, பின்னேரம் விளையாட்டு, அந்த விளையாட்டில ஒன்றுதான் இது.

கிளித்தட்டு அல்லது கிளிக்கோடு எங்கட ஊர் விளையாட்டுக்களில ஒன்று. இடத்திற்கிடம் பெயரும் விளையாட்டு முறைகளும் வேறுபட்டு காணப்பட்டாலும் விசயம் ஒன்று தான். நாங்கள் எல்லாரும் விவசாய குலம் தான், இப்ப பல தொழில் இருந்தாலும் முந்தி ஒரே தொழில் தான் வேட்டையும் விவசாயமும். அப்படி பட்ட எங்கள் விவசாய கலாச்சாரத்தைத் தழுவியது தான் இந்த கிளித்தட்டு.

நெல் விதைத்த காலங்களில நெல்விதையைப் பொறுக்க வரும் கிளிகளை வயல் வரப்புகளில் ஓடி கலைப்பார்களாம். அப்படி வந்தது தான் இந்த விளையாட்டு,  தட்டுகளில் ஓடிக் கலைத்து வயலைக் காக்கும் செயற்பாட்டை தான் நிலங்களில் கிளித்தட்டு என்று விளையாடுகின்றோம். இந்த விளையாட்டில் காப்போர் விவசாயிகளாகவும், புகுவோர் கிளிகளாகவும், தட்டுக்கள் வயல்களாகவும், சுவடுகள் வயல் வரம்புகளாகவும் கருதப்படுகின்றது.

தமிழர் வாழுற நாடுகளில பொதுவா விளையாடி வந்த இந்த விளையாட்டினை "யாட்" "தாச்சி" என்றும் சில இடங்களில சொல்லுவினம். மைதானம் என்று இதுக்கு எதுவும் தேவையில்லை நல்ல வெட்டை நிலம் காணும். அது தான் மைதானம். பண செலவு எதுவும் இல்லாது இருப்பதுடன், நேரம் போவதும் தெரியாது. எமது பண்டைய விளையாட்டுகள் எங்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் இருந்தது. அது இந்த கிளித்தட்டுக்கு மேலதிக சிறப்பாக இருக்கிறது.

மாதிரிப்  படம்.

சரி பின்னேரங்களில கோவில் வீதிகள், சன சமூக நிலையங்கள், நிறைய அங்கத்தவர் கொண்ட வீட்டு முத்தங்களில் அதிகளவானோர் கூடும் போது இந்த விளையாட்டுகள் விளையாட முடிவெடுப்பம், கன்னை பிரிக்கிறது என்று சொல்லி இரு அணியாக பிரிக்கிறது தான் முதல் வேலை, அங்க நிக்கிறவைல பெரிய ஆக்கள் இல்லை என்றால் நல்லா விளையாடக்கூடிய இரண்டு பேரை முன்னிலைப்படுத்தி கன்னை பிரிப்பினம், நல்ல கன்னை கிடைச்சால் அதிஷ்டம் தான். அதிலயும் சண்டை வரும் யார் முதலில கன்னை கூப்பிடுறது என்று. அதுக்கு டாஸ் போட்டு பாத்து, கூப்பிட்டு கன்னையும் பிரிபட்டுடும், 

இனி கோடு கீற வேணும் கோடு கீறுறது ஒன்றும் பெரிய வேலையில்லை, காலால கீறவேண்டியது தான். இல்லை என்றால் தடி. கோடு கீறி முடிய நான் மேல சொன்னது போல வரும். ஆக்கள் கூட என்றால் ஐந்து பெட்டி, குறைய என்றால் மூன்று பெட்டி. அகல பக்கமாக இரண்டு பெட்டிகளைக் கொண்டு நீளப்பக்கமாக மூன்று, ஐந்து என நீண்டு போகலாம்,மூன்று பெட்டிகள் எனின் ஒரு கன்னைக்கு குறைந்தது நாலு ஐந்து பேர் எண்டாலும் வேணும்.

இவ்விளையாட்டில் புகுதல்,  காத்தல் என இரண்டு முக்கிய விடையங்கள்  இருக்கு, புகுதல் என்று பொதுவாக நாங்கள் கதைக்கிறது இல்லை, இறங்கிறது என்று தான் கதைப்பம், இறங்குகிறவர்களில் ஒரு வகை, இவர்கள் இறங்க ஆரம்பித்தால் தொடர்ந்து இறங்கி கொண்டே இருப்பர். சிலர் இறங்கி பெட்டிக்குள்ளேயே நிற்பார்கள், காக்கும் அணியினர் கூடுதாலன நேரம் காக்க வேண்டி இருக்கும், இது காப்பவரின் திறமை என்றும் கூறலாம். பின்னர் வந்த காலத்தில் இதனை தவிர்ப்பதற்கு நேரத்தினை கொடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை அப்பதான் வரும், யார் முதலில இறங்குற என்று, இரண்டாவதா கன்னை கூப்பிடறவர் தான் இறங்க போவதாக சொல்வார், ஆனால் எதிர்ப்பு கிளம்பும், டாஸ் போட வேண்டிய கட்டாயம்,  யார் என்பதையும் டாஸ் தான் சொல்லும், 

டாஸ் போடுறதுக்கு நாங்கள் தெரிவு செய்யுற முறைகள் கனக்க இருக்கு, உங்களுக்கு என்றும் வேறு வேறு முறைகளையும் வைச்சிருப்பீங்கள், தேங்காய் சிரட்டை, ஓடு, சீட் துண்டு, இவைகள் பள்ளம், புட்டி, சொல்லி இறங்கும் அணி தெரிவாகும். சில வேளைகளில் விரலுக்கை இலையை வைச்சு இன் அவுட் சொல்லியும் இருப்பம். சில்லறைக் காசில  பூ, தலை போட்டும் தொடங்குவம், அதில கூட பிரச்சனை வரும். அதையும் தாண்டி இறங்கினால். விதிமுறைகள்.

கிளி, கிளி யார் எண்டால் இறங்குற கன்னையின்ர தலைவர், இவர் நீள் கோடு வழியாகத்தான் செல்ல முடியும், காப்போர்/மறிப்போர் கோடுகளை தவிர ஏனைய கோடுகள் எல்லாம் கிளி ஓடமுடியும். தனது கைக்கு எட்டின தூரம் வரை இறங்குபவரை அடிக்க முடியும், கிளி அடிச்சால் அவுட். ஏனையவர் குறுக்குக் கூட்டில் நின்று இறங்குபவர்களை மறிப்பார்கள், ஒன்றிற்கு மேற்பட்ட ஆக்கள் ஒரு கூட்டில் நிற்கும்போது, காப்பவர் மறிக்கும் போது கிளியும் வந்து சேர்ந்து பூட்டு ஒன்றை உருவாக்கும், இது காயுடன் உருவானால் காய்ப்பூட்டு என்றும், பழத்துடன் உருவானால் பழப்பூட்டு என்றும் சொல்லுவினம், இனி பூட்டினை உடைக்கவேண்டும். இறங்கும் இன்னொருவர் கிளியின் கவனத்தை கலைக்க வேண்டும். கலைத்து, களைக்க வைத்தால் தான் பூட்டில் உள்ளவர் வெளியே போக முடியும். இதுக்குள்ள இன்னொரு பிரச்சனை இறங்கின ஆள் பின் வாங்கி பெட்டிக்குள்ள போனாலும் அவுட்,


பெட்டி தாவும் போது மறிப்பவர் அடித்தாலும் ஆள் அவுட். இடப்பக்கத்தால் தாவும் போது இடக்கையாலும், வலப்பக்கததால் தாவும்போது வலக்கையாலும் அடிப்பார்கள். ஆனால் கிளி எந்தக்கையாலும் அடிக்கலாம். அடிவாங்காமல் தாவ வேண்டும் என்றால் பக்கத்து பெட்டிகளுக்குள் மாறி மாறி ஓடி உச்சி அடிவாங்காமல் தாவ வேண்டும். உச்சி ஒவ்வொரு பெட்டியாக தாண்டி வெளியே சென்றாக வேண்டும். இனிமேல் தான் பிரச்சனை. மீண்டும் உள்ளே  இறங்கவேண்டும். இப்போது காப்பவருக்கும், இறங்குபவருக்கும் கஸ்ரமான காலம். இனிமேல் தான் விளையாட்டே ஆரம்பமாகும். பெட்டிகளைத் தாண்டி வெளியே சென்றவர்கள்  எதிர்ப்பக்கமாக முன்னேறி மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கு போய்ச்சேர்வது தான் விளையாட்டின் கிளைமாக்ஸ்.

யார் இந்த காய் பழம் என்று பார்ப்போம், ஆரம்பித்த இடத்தில் இருந்து பெட்டிக்குள் இறங்கியவர் காய், உச்சி முன்னேறி வெளியே சென்று மீண்டும் உள்ளே வருபவர்கள் பழம். இங்கு தான்  “காயும்” “பழமும்” பிரச்சனை வரும், இருவரும் ஒரே பெட்டிக்குள் செல்லவோ, நிற்கவோ முடியாது, இவ்வாறு நடந்தால். அந்த மைதானமே அதிரும், காயும் பழமும், அவுட் அவுட்..

அந்த அணியே ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, பின் காப்பினை ஆரம்பிக்கவேண்டும்.


இவ்வாறு இரண்டு பேரும் மாறி மாறி விளையாடி தாம் எடுக்கும் வெற்றிகளின் எண்ணிக்கையில் அன்றைய போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார், இது முனைய காலங்களில் வெற்றிக்கேடயங்களுக்காக ஆட்டத்தொடராக நடாத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு, 

இப்ப அங்க நடக்கிற விசயங்களை பார்ப்பம், அளாப்பல் நிறைய நடக்கும், சில நேரம் அளாப்பினால் தான் வெற்றி வரும், கையே முட்டி இருக்காது, ஆனால் அடி என்று கத்துறது, மறிப்பவர்கள், கோட்டில கால் பட்டுட்டு என்று பழைய காலடியைக் காட்டி, ஆளை அவுட் ஆக்கிற, இறங்கிக்கொண்டிருப்பவர்கள் கிளியினை ஏமாத்த பல வேலைகள் செய்ற, சம்பவங்கள் நடப்பதுண்டு, சின்னச் சின்ன சண்டைகள் கோபங்களுடன் விளையாடும் போது போட்டியின் விறுவிறுப்புக்கு எல்லையேயிருக்காது.

நேரம், அலாப்பல், சண்டை போன்றவற்றால், போட்டி என்று வரும் போது நடுவர்கள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றார்கள். சில விதிமுறைகளும் மாற்றப்படைத்து. எது எப்படி இருந்தாலும், எமது பண்டைய விளையாடுகள், விளையாடும் போதும் சரி, விளையாடி முடித்தபின்னும் ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு போய் விடும்.

எமது பாரம்பரியங்களை மீட்டு, ஆவணப்படுத்தும் இந்த முயற்சிகளுக்கு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்,உங்கள் அனுபவங்களையும் பகிரலாம்,

-தமிழ்நிலா-
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. காயும் பழமும் தனியா நின்டா பூட்டு இல்ல

    ReplyDelete
    Replies
    1. ஒன்றுக்கு மேற்பட்ட காய் அல்லது பழம் ஒரு பெட்டியில் நிற்கும் போது பூட்டு உருவாகும்

      Delete
  2. வாசித்த போது பழைய ஞாபகம் இனிதே வந்து போனது

    ReplyDelete
  3. கிளி, காக்கின்ற கன்னையின் தலைவர் அல்லது திறமையான வீரர்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா