Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நகரசபையும் கொல்களமும். மதமும் உண்ணாவிரதமும்..

2 comments
"மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை,
எங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,"
நாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து இஸ்லாம் பிரச்சனையும் அல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு முஸ்லீம் நண்பனாக இருப்பான், ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ஒரு நல்ல தமிழ் நண்பன் இருப்பான். ஆக,

சச்சிதானந்தம் ஐயாவின் இன மத பிரச்சனைக்கு அப்பால், அதிகளவில் இந்துக்கள், குறிப்பிட்ட அளவில் கிறிஸ்தவர், மிகச்சிறிய அளவில் முஸ்லீம்கள் வாழும் ஒரு பிரதேசம் தான் சாவகச்சேரி. இன்னும் நாவற்குழி சிங்கள குடியிருப்பும், இராணுவங்களும் வாழ்வதால் மூவின மக்களையும், நான்கு மதங்களையும் கொண்ட ஒரு நிலப்பரப்பு தென்மராட்சி என்றும் கூறிக்கொள்ளலாம்.

இந்த நிமிடத்திலும் தமிழர்களின் உணவகங்களில் மாட்டுக்கொத்து, றைஸ் அதோடு மாட்டு டெவல் கூட இருப்பதாலும், எம்மில் சிலர் மாடு இறைச்சியை விரும்பி உண்பதாலும் நான் மத விடையங்களுக்குள் போகவில்லை. அதை அப்படியே விட்டுவிடுவோம், மாறாக இப்போது எமக்குள் இருக்கும் பிரச்சனை, எமது பிரச்சனை, எமது நகரசபையின் எல்லைக்குள் இவை உள்ளதனால், என்ன அந்த பிரச்சனை என்பது பற்றி சிறிது ஆராய்ந்து சொல்லலாம் என்று நினைக்கிறேன்,

கொல்களம் 
இறைச்சியை அந்த இடத்தில் உள்ளவர்கள் இலகுவில் பெற்றுக்கொள்ளவும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவர சட்டங்கள் அனுமதிக்காமல் இருப்பதும் தான் அந்த அந்த மாநகர, நகர, பிரதேச சபைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இறைச்சிக்கடைகளை அமைத்து குத்தகைக்கு கொடுக்கின்றது. இறைச்சியை வெட்ட என்று கொல்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன, இந்த குத்தகை வருமானம் நகர் அபிவிருத்திக்கு பயன்படுகின்றது. நிற்க

சாவகச்சேரியில் அவ்வாறு குத்தகையில் எடுத்துக்கொண்ட கடைகளில் கோழி, மாடு என்பன விற்பனையில் உள்ளது. ஆனால் மாட்டு இறைச்சியை உண்பவர்கள் தென்மராட்சியியை பொறுத்தவகையில் மிக சொற்ப அளவில் தான் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு நாள் தேவைக்கு அதிகமாகவே ஒரு மாட்டின் இறைச்சி இருக்கும். அண்ணளவாக எண்பது (80) கிலோ தொடக்கம் நூறு (100) கிலோ வரை தேவைப்படும் ஒருநாளின் தேவைக்கு வெட்டப்படும் மாட்டு இறைச்சியின் அளவு நூற்று இருபது (120) கிலோவிற்கு மேல் இருக்கும்.

விசேட நாட்கள் அல்லது கேள்வி இருக்கும் நாட்களில் இன்னும் ஒரு மாடு போதுமானது. மேலதிகமாக கொடிகாமத்தில் இயங்கும் இறைச்சிக்கடைக்கு ஒன்று எனக் கொண்டால், ஆகக்கூடியது மூன்று மாடுகள் மட்டும் தான் வெட்டலாம். நிற்க,

ஆரம்பம்  - இறுதி 


எமது நகரின் இந்த பிரச்சனை ஒரு சட்டவிரோதமான, அச்சுறுத்தல் மிகுந்த, களவு, கடத்தல், சுகாதாரமின்மை, சூழல் பாதிப்பு போன்றன ஒன்று சேர்ந்து நடைபெறுவதால், எமது ஒட்டு மொத்த சமூகமும் இதனை அணுகவேண்டிய விதம் வேறுமாதிரியாக இருக்கவேண்டும். வெறுமனே மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ அணுக முடியாது.

சட்டவிரோத கொல்களம்
உதயசூரியன், சாவகச்சேரியின் நகரை அண்மித்த, கிராமமாகும், நகரசபை ஊழியர்கள் வாழும் கிராமத்திற்கு சிரமாதானம் செய்வதுடன் அங்கு காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு அங்கு சென்ற நகர சபை உறுப்பினர்களுக்கு அந்த பிரதேச இளைஞர்கள் சிலரால் சட்டவிரோதமாக இயங்கும் கொல்களம் ஒன்று இனங்காட்டப்பட்டது. எட்டு அடிகளில் மதில் கட்டப்பட்டு, உள்ளே நாற்பது மாடுகளுக்கு மேல் இருந்ததாகவும், உள்ளே பிரத்தியேக  கொல்களம் ஒன்றும் வெட்டப்பட்ட மாடுகளின் கழிவுகள், கூடவே நாய்த்தலை என்பனவும்  வாகனங்களும் இருந்துள்ளது.

இதன் தீவிரத்தன்மை அறிந்த உறுப்பினர்கள், இதனை உடனடியாக சீல் வைப்பது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் பதிவதும் என்றும் சகல உறுப்பினர்களாலும் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கிழமை சீல் வைக்கப்பட்டது. ஆனால் உள்ளே இருந்த மாடுகள் பற்றி தகவல்கள் இல்லை.

இந்த பிரச்சனை ஓய்வதற்குள், மீண்டும் பிரதேச பொது மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் சென்று நகரசபை கொல்களத்தை பார்வையிட்ட சமயம் 31 மாடுகள் ஒரே நேரத்தில் வெட்டப்பட்டுக்கொண்டும், வெட்டுவதற்கு தயாராகவும் இருந்துள்ளது. இது உடனடியாக நகர சபையின் உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது. இருந்தும் பல மணிநேரங்கள் கடந்தும் சபையால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இறுதிவரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு முடிவில்லாமல் இருந்துள்ளது. குறிப்பாக பகல் இரண்டு மணிக்கும் வெட்டப்பட்டுக்கொண்டிருந்துளது.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இறைச்சி அண்ணளவாக இருபது மாடுகள். ஒன்று நூற்று இருபது கிலோ எனின் (20x120=2400Kg) இரண்டாயிரத்து நானூறு கிலோகிராம் வெளியிடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. எந்தவிதமான எதிர்ப்போ சட்ட நடிவடிக்கையோ எடுக்கப்படவில்லை. போலீசார் உட்பட, ஏன் எனில் அது தொடர்பான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை,

கேட்கப்பட்ட  கேள்விகள்..
  • இவ்வளவு பெரும்தொகையான மாடுகள் எங்கிருந்து வருகின்றன..?
  • மாடுகளில் நோய்த்தொற்றுகள், கடைகள்  அவதானிக்கப்பட்டு சுகாதார உத்தியோகத்தர்களின் அனுமதி பெறப்பட்டதா..? 
  • இப்படி அதிகளவான மாடுகள் வெட்டலாமா? 
  • 30 மாடுகள் ஒரு நாள் தேவையா? சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் எதாவது.? 
  • இவை வெட்டப்பட்ட பின் இறைச்சி என்ன ஆகிறது?
  • வெட்டிய கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றது? அல்லது அகற்றாமையால் ஏற்படும்  பிரச்சனைகள்?
  • இந்த பிரச்சனைகள் உங்கள் காலத்தில் இல்லையா?

பதில்களும் விளக்கங்களும்.

வேறு இடத்தில் இருந்து வரும் மாடுகள் 
"இந்த மாடுகளில் அநேகமானவை கட்டாக்காலி, தனங்களப்பு பகுதில் பிடிப்பவை, கச்சாய் கடற்கரையோரங்களில் காணாமல் போவவை, வீடுகளில் இரவுகளில் களவு போனவை. வேறு வேறு ஊர்களில் களவாடப்பட்டு வாகனங்களில் கடத்தி வரப்படுவவை. மேலதிகமாக கடல் மார்க்கமாக தீவுகளில் இருந்து கொண்டுவரப்படுவவை. அத்துடன் சில ஊர்களில் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படுவை இவற்றுள் பசுமாடுகள், கன்றுத்தாச்சி மாடுகள், கன்றுகளும் உள்ளடக்கம்," ஊர் இளைஞர்

 நிலங்களில் இறைச்சி  
"உண்மையில் மாடுகள், பொது சுகாதார பரிசோதகர், கால்நடை வைத்திய அதிகாரி போன்றோர் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டுத் தான் வெட்டப்படவேண்டும். வெட்டுபவர்கள் கூட தொற்று நோய்க்கு உள்ளாகாமல் இருக்கவேண்டும், கடையில் வேலைக்கு அமர்த்தப்படுவோரும் அவ்வாறுதான். கொல்களத்தில் இருந்து கொண்டுவரும் மாமிச துண்டுகள் பாதுகாப்பான பெட்டிகளை கொண்டுவர வேண்டும்,  மேலும் பொது சுகாதார பரிசோதகர் முத்திரை குத்தாத இறைச்சி கடைகளில் விற்கமுடியாது.  சட்டவிரோதமானவை எப்படி இவ்வாறு பெறப்படும்," கஜன், சமூக ஆர்வலர்


"சட்டங்கள் பொதுவானவை உள்ளுராட்ச்சி சபைகளில் மாடுகள் அனுமதியுடன் எவ்வளவு எண்ணிக்கையிலும் வெட்ட அனுமதி உள்ளது, மேலும் வாங்கும் மாடுகள் விற்பவரின் சம்மத கடிதம் சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். கால்நடை வைத்திய அதிகாரி பரிசோதித்து வழங்கப்பட்ட இலக்கத்தகடு காதில் இருக்கவேண்டும் இருந்தால் அது தகுதியான மாடு. ஒவ்வொரு மாட்டிற்கும் தனி தனியான ஆவணங்கள் சமர்ப்பித்து உரிய முறையில் அனுமதி பெற்று, காட்சிப்படுத்தப்பட்டு கால்நடை வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் முன்னிலையில் வெட்டலாம். ஆனால் சபைகள் தங்களுக்கு என்று தனி தனியான தீர்மானங்களை எடுத்திருக்கும், அவை அவ்வூர் சார்ந்தோரின் தேவைகள், மரபுகளின் அடிப்படையில் இருக்கும், அந்த பிரதேசத்தின் நுகர்வு நூறு கிலோ எனின் அவ்வளவு தான் வெட்டலாம், "  நகரசபை உறுப்பினர்.


வெட்ட தயார்நிலையில் மாடுகள் 
"ஒரு நாளைக்கு 80-100 கிலோ மாடுதான் அனுமதியுடன் வெட்டலாம் மேலதிகமாக விழாக்கள் ஏதுமென்றால் இன்னொருமாடு அனுமதியுடன் வெட்டலாம். எருது மாடுகள் முதல் நாளே (24 மணிக்கு முன்) நகர சபை வளாகத்தில் குறித்த இடத்தில் கட்டவேண்டும். பசு மாடு முற்றிலும் வெட்டமுடியாது. கொல்களத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை தான் வெட்டலாம். அவ்வாறு வெட்டுகிற இறைச்சி நகர சபை எல்லை தாண்டி கொண்டு போவது குற்றம். கடைக்கு கடை கூட மாற்ற முடியாது என்று குத்தகை உடன்படிக்கையில் உள்ளது, இவை இன்று நேற்று அல்ல ஆரம்பம் முதலே உள்ளது. அத்துடன் கூலர் வாகனம் இறைச்சி கடை வரை செல்லமுடியாது என்ற தீர்மானங்களும் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது.  வெளியில இறைச்சி கொண்டு போகேலாது, சட்டப்படி குற்றம் என்றால் ஏன்  முப்பது மாடு வெட்டுவான்?," திரு.நடனதேவன், நகரசபை உறுப்பினர்.

"வெட்டப்பட்ட இறைச்சிகள், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்கள், கொடிகாமம், யாழ்மாவட்டத்தின் ஏனைய சில பிரதேசங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுவவை போக ஏனையவை விற்கப்படுகின்றன. குறித்த ஒன்றோ அல்லது மேற்பட்ட  அரசியல்வாதியின் செல்வாக்கில் இவை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஒரு கிலோ இறைச்சி ஆயிரம் ரூபாய் எனின், சாதாரணமாக யோசித்துப்பாருங்கள். நூறு கிலோ எனின் (100x 1000=100,000.00) ஒரு இலட்சம். ஒரு நாள் சட்டப்படி விற்பனை செய்தாலே நிறைந்த லாபம் அடையலாம். அப்போது, இந்த சட்டவிரோத நடவடிக்கையில் எவ்வளவு கிடைக்கும்," திரு நிதிகேசன், நகரசபை உறுப்பினர்,


கழிவுகள் அப்படியே 
"நங்கள் இந்த கொல்களம் தொடர்பாக பலபேரிடம் சொல்லியிருந்தோம், அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள், எங்களுக்கு இவற்றால் சுகாதார பிரச்சனைகள் பல உள்ளன, உரிய முறையில் அப்புறப்படுத்தாமையினால் மணம், நுளம்பு பெருக்கம், எஞ்சிய கழிவுகளை நாய் போன்றவை கொண்டுவந்து ஊருக்குள்ள போட்டுடும், பசு மாடுகள் வெட்டினால் கன்று இருந்தால் வெளியே போட்டுவிடுவார்கள் அது நாள்போக மணக்கும். நகரசபைக்காரரும் போய் எடுக்கேலாது, இவையும் குடுக்காயினம், இந்த முறை சொன்னதுக்கு  இப்ப பூட்டியாச்சு, ஆனால் இப்ப அரசாங்க கட்டிடத்திலேயே செய்யுறாங்கள், அவங்கள் செல்வாக்கானவங்கள், ஒண்டும் செய்யேலாது தம்பி,"  ஊர் ஐயா,

அனுமதி எடுக்கும் முறை
"இறைச்சிக்கடை அல்லது இறைச்சி விற்போர் கட்டளை சட்டத்தின் படின் எங்களிடம் சரியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால் நகர சபை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்து தான் ஆகவேண்டும், அவ்வாறு தான் எங்கள் காலத்திலும் கொடுத்தோம், சட்டத்தில், குத்தகை உடன்படிக்கையில் மாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை, எமது தேவை நூறு கிலோ எனின் ஒன்று அல்லது இரண்டு மாடுகள் தான் வெட்டலாம் என்று குறிப்பிட்டு விலைமனு கோரியிருக்க வேண்டும், அவ்வாறு இல்லாது போனால் நாம் வேறு ஏதும் செய்யமுடியாது. நகர சபையிடம் அனுமதி பெற்ற மாடுகள் வெட்டலாம், எமது மக்களின் இறைச்சித்தேவை பூர்த்திசெய்யப்படல் முதல் அவசியம், மேலதிகமானவை வெளியே கொண்டு செல்வதை பொலீசார், பிரதேச செயலர் போன்றோர் தான் அவதானிக்க வேண்டும், மாநகர சபையில் பத்திற்கு மேற்பட்ட கடைகள் உள்ளது, அங்கும் மாடுகள் வெட்டப்படுகின்றது, நானும் இவற்றுக்கு எதிரானவன் தான்,  இவை இவ்வாறு அல்ல மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி சாதிக்கவேண்டிய ஒன்று, " திரு.கிசோர், முன்னாள் நகரசபை உறுப்பினர்.

இவ்வாறாக பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்கள், பகிர்ந்தவற்றில் சிலவற்றை பகிர்கிறேன், இப்போதுவரை மதம் என்பது காரணம் ஆகவில்லை, வெறுமனே, அதிகாரம், அதிகார துஸ்பிரயோகம், சுயநலம், லஞ்சம், ஊழல், பாதிக்கப்பட்டோர், காரணமாவர்கள் இவர்களை சுத்தியே கதை இருக்கிறது,  இங்கே கட்சி பேதங்கள் இருக்கவில்லை, பெரும்பான்மை இரண்டும் தமிழ் தேசிய கட்சிகள், ஏனையவை மக்கள் சார்ந்தே இயங்குகின்றன, சிவசேனை ஏன் இங்கே வந்தது என்ற கேள்வி பெரும்பான்மையான உங்களில் இருக்கும். ஏன் எனில், பசுமாடு, கன்றுகள் கொல்லும் செயற்பாடுகள் வேகமாக பகிரப்பட்டதாலே அன்றி வேறு ஒன்றும் இருக்காது, இந்துக்கள் பசுவினை கடவுளாக கொள்வதால் அவர்கள் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார்கள். இந்து அம்மைப்புகள்  இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு முயற்சி செய்வதற்கு முதலில் மாட்டு இறைச்சி உண்பதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை உங்கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்கள் மாட்டு இறைச்சி உண்பதை முற்றாக தவிர்த்தால், இது போன்ற இறைச்சிக்கடைகளின் தேவை தானாகவே இல்லாது போகும்.

சிவசேனையின் பிரவேசத்தால், சச்சிதானந்தம் ஐயாவின் தேவையற்ற பேட்டியினால், மாட்டுடன் நின்ற இந்த விடையம் கயிறு மூலம் கட்டியிருக்கும் மரத்திற்கு சென்றுவிட்டது. அதனை மீண்டும் மாட்டின் மேல் கொண்டுவருவதற்கே இந்த விடையங்களை எழுதி இருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு புரியும் இதன் அவசியம் அல்லது அவசரம். உங்கள் ஊர்களிலும் கொல்களம் இருக்கலாம், இதே போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். எனவே மத இன விடையங்களை கடந்து பொது  நோக்கோடு சிந்திக்கவேண்டிய அவசியம் உள்ளது.

எமது நகர சபையில், சபையின் கூட்டத்தொடரின் போது, எத்தனை மாடுகள் வெட்டலாம் என முடிவு எடுத்து, உள்ளூராட்சி அமைச்சில் அதனை பதிவு செய்து அல்லது வர்த்தகமானியில் பிரசுரித்து சரியான முறையில் நடந்து கொண்டால், இனிமேலும் இது போன்ற விடையங்களை இல்லாமல் செய்யலாம், பொலீஸ் மற்றும் பிரதேச செயலகம் தமது அதிகாரங்களை பயன்படுத்தி எதாவது செய்யமுடியுமானால் சிறப்பானது.

இதனை ஒரு முஸ்லீம் சமூகத்தவர் நடத்துவதனால், அவருக்கு எதிரானது என்றோ, அல்லது அவரை வெளியேற்றும் முயற்சி, அல்லது அதில் வெற்றி என்றோ நினைத்து விட்டுவிட முடியாது, இது இப்போது தான் ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் சார்ந்து செயற்பட முடியாது. இது வேறுமாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

சபையில் பெரும்பான்மையினர் மூடுவதற்கான தீர்மானத்துடன் ஒத்திருந்தாலும் ஒரு சில உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு இணங்க , எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறும் பட்சத்தில் ஒப்பந்தத்தை முடிவுக்குக்கொண்டுவருவதாக அறிவிக்கமுடியும் எனவும். அத்துடன் வழக்கு தொடரவும் முடியும் என்றும் . இதைவிட வேறு இடங்களிற்கு அனுபப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் பொலிஸின் உதவியை நாடவுள்ளதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்தும் இது இப்படித்தான் இயங்க வேணுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,  மக்களே சிந்தியுங்கள். முடிவெடுங்கள்.  மாற்றம் எம்மில் இருந்து தான் உருவாக்க/ உருவாக வேண்டும்.


-தமிழ்நிலா-

நன்றி தகவல் மற்றும், படங்களை வழங்கியோர், கிராமசேகவர், கிராம மக்கள், நகரசபை உறுப்பினர்கள், நண்பர்கள்.

இக்கட்டுரை ஊறுகாய் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

http://oorukai.com/?p=1964

Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. மிக அருமையான தெளிவூட்ட பதிவு.

    ReplyDelete
  2. Anonymous2:45:00 pm

    Best Rated Online Casino Games - casinoland.jp카지노 가입 쿠폰 카지노 가입 쿠폰
    카지노 카지노
    카지노 카지노
    Alienware UFO specifications | Gaming | PC Gaming - Lifestyle

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா