Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

அழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா

2 comments

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இலட்சங்களுக்கு மேல் இருந்த பனைகள், உள் நாட்டுப் போர், கட்டடங்கள், வீடுகளின் பெருக்கங்கள், மின் வசதிகள், வீதி அகலிப்புகள் காரணமாக, செயற்கையாகவும், இயற்கையாகவும் அழிந்து 20 இலட்சங்களை அண்மித்துவிட்டது.

மிதவெப்ப மண்டல கால நிலைகளை ஒத்த பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, ஆகக் குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். விதைக்காமலே வளரும் பனைகளின் இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை பொதுவாக இரண்டு வகைப்படுத்தப்படும். ஆண், பெண். பெண் பனையை முற்காலத்தில் பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனவும் குறிப்பிடுவது வழக்கம். 

பெண் பனையும், ஆண் பனையும், 
பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 15 அடி உயரம் வரை வளர்கின்றதாம். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் எது பெண் பனை எது என்று அடையாளம் காணமுடியும். ஒரு பனை குறைந்தது 30 அடி உயரத்திற்கு மேல் வளரும். 



உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வளைகள், கைமரங்கள், சலாகைகள் என இன்றும் பாவனையில் உள்ளது. சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் முன்னைய காலங்களில் பயன்படுத்தினர். மேலும் நேர்த்திகள் செய்யும் பறவைக்காவடி கட்டும் மரங்களாகவும் பயன்படுகிறது. நீண்ட மரங்கள் சீவப்பட்டு மின் கம்பங்களாகவும், இராணுவ காவலரண்களை உருவாக்க, பதுங்கு குழி அமைப்பிலும் பயன்பட்டது. எமது ராணுவத்தில் பனைகள் தறிக்க தடை இருந்தது. அதனால் காவலரண் தேவைகளுக்கு தேக்கு மரங்கள் வளர்க்கப்பட்டன.

இதன் வேர்த்தொகுதி நீண்டு வளர்வதால் நில நீர் மட்டங்களை மேல் உயர்த்தி வைத்திருக்கும். அதிக பனைகள் உள்ள இடங்களில் நீருக்கு பிரச்சினை இருக்காது. மழை நீரினையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், தண்டு பகுதியில் சேகரித்து, கடுமையான வறட்சி காலங்களில் கூட, நிலத்தடி நீரை எதிர்பார்க்காமல் உயிர்வாழும். இலைகள் தண்டுடன் 6-8  அடிகள் இருக்கும், வீசும்காற்றின் வேகத்தை மாற்ற, திசையை மாற்ற இவை இயற்கையாகவே அமைந்துள்ளன, இவை வேலிகள், கூரைகள், பெட்டிகள், பாய், போன்ற பல பொருளின் உருவாக்கத்தில் இன்றும் உள்ளது. ஆகப் பண்டைய காலங்களில் எழுதும் ஏடாகவும் பயன்பட்டது.

ஓலையைத் தாங்கி நிற்கும் பனம் மட்டைகள், வீடுகளைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கவும், பழைய மண் வீடுகளில் தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. ஒருகாலத்தில் பச்சை மட்டை அடிகள் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

குளக்கரையில் பனை மரங்கள்
அடி முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இதனாலேயே தேவலோகத்து கற்பகதருவுக்கு ஒப்பிட்டு நமது பனையையும் கற்பக தரு என்றார்கள் நம் முன்னோர்கள். 
100 பனைகள் ஒரு காட்டை சமன் செய்து விடுகின்றன.




நுங்குத்திருவிழா - 2018

இப்போது நுங்குத்திருவிழா பற்றிப்பார்ப்போம், வவுனியா, சுயாதீன இளைஞர்களினால் வெளியிடப்பட்ட  அழைப்பிதழின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தின் பேரில், "ஆத்தல்" குழுவினருடன் ஒரு பயணம் மன்னர் நோக்கித்தயாரானது. நண்பர்களுடன்  பேருந்தில் ஏறி மன்னார், பாப்பா மோட்டை சந்திக்கு அண்மையில் உள்ள திருவிழா நடக்கும் பகுதியில் ஒன்றுகூடினோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குளக்கரையோரமாக பனைகள் அதிகம் உள்ள ஒரு இடத்தினை தெரிவு செய்திருந்தார்கள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. நிலத்தின் ஈரலிப்புடன் சற்று சூடான காற்றும் மனதிற்கு இதம் தான். மிகவும் சிறப்பான இடம் அது. அவர்கள் வேறு ஒரு இடத்தில் விழிப்புணர்வு நிகழ்த்திக்கொண்டிருந்ததால் நாங்கள் அதிக நேரம் காக்கவேண்டிஏற்பட்டது.


வவுனியா இளைஞர்களும் வந்து சேர  நுங்குத்திருவிழாவும் ஆரம்பமானது. பனை மரத்தின்  பயன்கள் பற்றிப் பேசிக்கொண்டே நுங்குகள் பறிக்கத் தயாரானோம். திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்கள்  தாங்கள் சென்றவருடம் 2000 பனம் விதைகள் நாட்டியதாக கூறும்போதே மெய் சிலிர்த்துக் கொண்டது, எமது வாழ்வாதாரமாக இருந்த மரம் இன்று இப்படி அருகி விட்டது என்று நினைக்கும் போது சற்று கடினமாக தான் இருந்தது.

முன்பெல்லாம் பனைகள் உள்ள வீடுகளில் ஒவ்வொருநாளும் திருவிழா தான். நுங்கு காய்க்கதொடங்க நுங்கு, சீக்காய். பின்னர் பழுத்து  நுங்கு விழுந்தால் பனம்பழம் பொறுக்கி பனங்காய் பணியாரம், பினாட்டு, பனங்கொட்டையிலிருந்து பனம் பாத்தி போடுவார்கள். ஏனையவை ஊமல் என்றாகி சமயலுக்கு அடுப்புகள் எரிக்க பயன்படும். முளைக்கும் பனங்கொட்டைகளை பிளந்து பூரான் சாப்பிட்டிருப்போம். பின்னர் பனங்கிழங்கு அதில் இருந்து புளுக்கொடி. பின்னர் மா என்று நீண்டு போகும்.

இப்போது எம் கலாசாரங்களை காக்க திருவிழாக உருவாக்கவேண்டி உள்ளது. போராட்டங்களை உருவாக்கி தீர்வுகளும், நினைவு நிகழ்வுகள் மூலமே மக்களை திரட்டவும் முடிகிறது. இப்படி ஒரு விழாவிற்கு இளைஞர்களின் பங்களிப்பு கிடைப்பது என்பது கடினம் தான். அதை கலந்து கொண்டோர் எண்ணிக்கையும் விளக்கிக்கொண்டது. இருந்தாலும் எங்களோடும் நண்பர்கள் நின்றார்கள். மரம் ஏறுபவர்களால் பயன்படுத்தப்படும் "தலநார்" இளைஞன் ஒருவரால் செய்து காட்டப்பட்டது. அதை காலில் மாட்டி பனையேறினான் அவன்.

எங்கள் ஊரில் சின்னவர் ஊர்ப்பனைகளில் அதிகமானவற்றை தன் வசம் வைத்திருந்தார். காலில் தலநார் போட்டு ஏறி முட்டிகளில் உள்ள கள்ளை போத்தல், கான்களில் நிரப்பிக்கொண்டு இறங்குவார். இடுப்பில் கத்தி வைக்க ஒரு ஒரு அமைப்பு இருக்கும், ஏறு பெட்டி என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறன். நெஞ்சில் கீறாமல் இருக்க ஒன்று கால்களில் ஒன்று என தோலில் செய்த ஒன்றை அணிந்திருப்பார் அது நெஞ்சுத்தோல் என்றும், கால் தோல் என்றும் சொல்லுவார்கள். நாங்கள் கேட்டால் கருப்பணி எடுத்துத்தருவார். இறக்கும் போதே உடன் கள்ளு என்று ஒரு சிலர் நிற்பார்கள். மிகுதி தவறணைகளுக்கு கொடுப்பார். மிகுதி வீட்டில் வியாபாரம். சின்னவர் சில நேரங்களில் வைத்துவிட்டு போகும் போத்தலில் விரல் விட்டு நக்கி இருக்கிறேன், அப்போது புளிக்கும் என்று நினைத்தது இப்போதும் அப்படியே.

இப்போது இதை குலத்தொழில் என்று செய்பவர்கள் இல்லை. எங்காவது ஒரு சிலர் செய்கிறார்கள். குடும்ப சூழ்நிலைகள் காரணமாக சிலர் இப்போதும் பனைத்தொழிலில் இருக்கிறார்கள். இப்போது சட்டங்களும் அதிகம். நினைத்தபாட்டில் விற்கமுடியாது. நுங்கு வீழத்தொடங்கியது. 


பின் அவற்றைப் பொறுக்கி அடுக்கினோம். வெட்டி வெட்டி தந்தார்கள் குடித்துக்கொண்டே இருந்தோம். சின்ன வயதில் நுங்கு குடித்த ஞாபகம் மீண்டுகொண்டது. அதன் பிறகு இது தான் முதல் தடவை. வீதிகளில் விற்றுக்கொள்வார்கள். ஆனால் வாங்கியதில்லை. அந்நிய உணவுகள், அந்நிய குடிபானங்கள் வருகையின் பின் இவை எங்கே, பீட்சாகளிலும் கோக்கோ கோலாக்களிலும் கழிகின்றன.  வீதி ஓரங்களில் அடுக்கி வைத்து விற்பனையில் ஈடு படுபவர்களை கடந்து வந்திருப்போம். வெளிநாட்டவர் அருந்திச்செல்லும்போது பந்தா எனவும் நினைத்திருப்போம். 

திருவிழாவில் கலர்து கொண்ட ஒருவர் தற்சார்பு பொருளாதாரம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆங்காங்கே நடைபெறும், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க செய்யவேண்டியவை பற்றி சொன்னார். உண்மை தான் விசிறி முதல் அத்தனைக்கும் மாற்றீடு வந்து விட்டது. ஆனால் பனை உயிர் வாழ அத்தனையும் தரும், ஒருவனின் வாழ்வாதாரம் முழுவதையும் ஒரு பனையே தரும், எனக்கு நினைவு உள்ள காலங்களிலேயே பனையின் மொத்தப்பயனும் அனுபவித்துவிட்டேன்.  பனை தன் ஒவ்வொரு அங்களையும் எங்களுக்கு ஈர்ந்துவிடுகிறது. இருப்பினும் இறப்பினும் பனை வீணாகப்போவதில்லை.


காலை எழும்பி ஒலைப்பாயை சுருட்டி வைத்து. பன்னாடை வைத்து எரித்து. தேநீர் அருந்தி. பெட்டியில் மா குழைத்து புட்டு அவித்து. பனம்பழம் பொறுக்கி போட்டு எங்கள் தேவை போக மாட்டுக்கும் வெட்டி வைத்து. சுழகில் அரிசி பிடைத்து, கறிசமைத்து திருகணையில் வைத்து மத்தியான சமயல் முடித்து. உறியில் இருக்கும் தயிர் எடுத்து உண்டு.  பனம் ஈர்க்கு கட்டிலில், விசிறி விசுக்கி காற்று வாங்கி வாழ்ந்தோம். இன்னும் நிறைய சொல்லலாம். சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்களுடன் கூடவந்தவர் "நுங்கு வண்டில்" கட்டிக்கொண்டிருக்க நாங்கள் நுங்கில் குளித்துக்கொண்டிருந்தோம். இப்போது யார் நுங்கு வண்டில் செய்து விளையாடுகிறார்கள். ஊமல் பொம்மைகள் எங்கு. பனையோலைக் காற்றாடிகள் என்றால் தெரியுமா?

நேரம் இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது. நுங்கு குடிக்கும் ஆசையை அரை மனதுடன் நிறுத்திக்  கொண்டு பனை ஓலைகளில் இளைஞர்கள்  பிளா செய்யத்தொடங்கினார்கள். பதநீரை பிளாக்களில் ஊற்றிக் குடித்து மகிழ்தோம், பதநீர் என்பது கள்ளு அல்ல முட்டியில் சுண்ணாம்பு தடவி வைத்து எடுப்பது. போதை தாராது. மிகச்சிறந்த மருந்து அது. கருப்பணி காச்சி பனங்கட்டிகள் செய்து சீவித்தவர்கள் நாங்கள். அதை விட இந்த காலம் பிளா  பயன்படுத்துவதே குறைவு என்று சொல்லலாம். இன்னும் பிற சில இடங்களில் கோவில்களில் கஞ்சி திருவிழாக்களுக்கு இன்றும் பாவனையில் உள்ளது. அது பாராட்டக்கூடியது. 

இப்போது பனைகளும் இல்லை, இலை வெட்டி பிளா செய்ய ஆட்களும் இல்லை, அலுமினியங்களும் சில்வர்களும் வந்து தேவைகளை குறைத்தும் விட்டது.


இறுதியில் இன்று குடித்து தீர்த்த நுங்குகளுக்கும் சேர்த்து  "5000 பனம் விதைகள் நடுவோம்" என்று சபதமும் செய்து கொண்டோம். இந்த முயற்சியில் நாங்களும் இணைந்து கொள்வோம். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். பழமைகளை பேணும் சந்ததி இன்றும் எம் மத்தியில் வாழ்கின்றது என்ற திருப்தியுடன் பனையின் பயன்களை பற்றி பேசியவாறு வீடு நோக்கி புறப்பட்டோம்..

திரும்பிய வழிகளை பனைகள் நிறைக்கவில்லை. ஆனால் எங்களிடம் இத்தனை பனைகள் இருந்தன.

1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை - இணையத்தில் கண்டவை 

-தமிழ்நிலா-


Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. பனை அதை விதை

    நல்ல ஒரு பதிவு காலத்தின் தேவை வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  2. தொகுப்பு அருமை நண்பா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா