Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வல்வை சரித்திரம் கண்டிராத பெருவிழா

Leave a Comment
யாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே இன்னும் அழியாது பேணப்படுகின்றது, அல்லது கொண்டாடப்படுகிறது. அதை இன்று வரை பேணிக்காக்கும் சமுதாயம் அருகிக்கொண்டு கொண்டு சென்றாலும், அந்த பழமையை கொண்டாடும் சமூகமும் எங்களுக்குள் இன்னமும் இருக்கவே செய்கிறது.

ஊரின் பிரபல தன்மைக்கு சில விழாக்களும், சடங்குகளும், திருவிழாக்களும் பெரிதும் காரணமாகின்றன. முன்னையபதிவில் தென்மராடசியின் பங்குனித்திங்கள், பிரசித்தி பெற்ற பன்றித்தலைச்சி பற்றி வாசித்திருப்பீர்கள். அந்த வகையில்,

வரலாற்றின் காலக் கோட்டினை இரு பகுதியாக பிரிக்கின், இரு வேறுபட்ட காலங்கள் கடந்தும், கடக்கவேண்டியும் இருக்கின்றது. கடல் கடந்து வணிகம் செய்யும் செட்டிமாரும், மாலுமிகளும் நிறைந்து வாழ்ந்த வல்வெட்டித்துறையில் இருந்து பாய்மரக்கப்பலில் ஏனைய நாடுகளுக்கு சென்று வந்தார்கள். அவ்வாறாக முற்பட்ட காலம் தொட்டே மீன் பிடி, மற்றும் வியாபாரத்தை பிரதான தொழிலாக கொண்ட வடமராட்சியின் வல்வெட்டித்துறை பிரதேசம் இன்றும் யாழ்மண் அல்லது மக்களின் வாழ்வியலை பறைசாற்றும் பிரதேசமாக திகழ்ந்து வருகின்றது.

வரவேற்பு மின் விளக்குகள்
யாழ் மாவட்டத்தின் எந்த பிரதேசத்திலும் காணமுடியாத சில விழாக்கள் இங்கு களைகட்டி நிற்பதை காணமுடியும். ஒன்று பட்டத்திருவிழா, இன்னொன்று பலரும் வியக்கும் சிலர் அறிந்திராத இந்திர வசந்த விழா. இந்த இரண்டு கொண்டாட்டங்களிலும் யாழ்பாணத்து மக்கள் பெரும்பாலானோர் பங்கெடுக்கின்றனர், இப்போது இவை யாழ்ப்பாணத்து பொது நிகழ்வாகவே மாறிவிட்டன இவை.

இந்திரவிழா என்று பொதுவாக அறியப்படும் இந்த நிகழ்வு, ஒவ்வொரு வருடமும் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் தீர்த்தத் திருவிழா அன்று இரவு நடைபெறும். இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவமானது, சித்திரா பௌர்ணமி நாளை இறுதி நாளாகக் கொண்ட 15 நாட்களும் மிகச் சிறப்பான நடைபெறும். 14 ஆம் நாள் தேர்த்திருவிழாவும் 15 ஆம் நாள் தீர்த்தோற்சவமும் அதனைத் தொடர்ந்து இந்திரவிழாவும் கொண்டாடப்பட்டு உற்சவம் நிறைவுக்குக் கொண்டுவரப்படும். முற்பட்ட காலத்தில் வல்வை  சரித்திரம் கண்டிராத பெருவிழா என விளம்பரப்படுத்தப்பட்டு, கொண்டாடப்பட்ட நிகழ்வே பிற்காலங்களில் இந்திரா விழாக் கொண்டாட்டமாகியது.

சோடனைகள் 
கடந்த சில வருடங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாதுகாப்பு அச்சுறுத்தல்களினால் இவ்வாறான விழாக்கள் சிறிதாகவே கொண்டாடப்பட்டு வந்தது. இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு அமைதியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு மீளவும் இவ் விழாவானது புத்துயிர் பெற்று கொண்டாட ஆரம்பித்துள்ளது, கடந்த வருடம் ஐம்பது வருடங்களை கொண்டாடி முடித்துள்ளது.

இந்திர விழா எனப்படுவது.

"பழஞ்சிறப்பு வாய்ந்த பூம்புகார் நகரின் புகழ் மேலும் சிறப்புற வேண்டும் என்று முனிவர் அகத்தியர் நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது ஆண்டுகொண்டிருந்த தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான்.
செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர் தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத் தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் பூம்புகார் நகரத்திலே வந்து தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு போதும் தவறவிட மாட்டார்கள். என்றும் . சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது என்றும் அறியமுடிகிறது,.
சிலப்பதிகாரத்தில் வரும் இந்தியாவின் பூம்புகார் நகரம் நெய்தல் நிலத்தில் அமைந்துள்ளது. அங்கே வருடம் ஒரு முறை தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்திர விழாவை கொண்டாடி வந்ததாகச் சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்பிட்டுள்ளது. இந்திர விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். இருபத்து எட்டு நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும் அந்த விழாவில் பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டு பூஜைகளும், நடனம், நாடகம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதாகவும். அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றது,.

பூம்புகார் நகர் மக்கள் தமது வேலையின் களைப்பை மறக்க ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இந்திர விழாவைக் கொண்டாடி மகிழ்ந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது"

து போன்ற நெய்தல் நிலம் தான் இந்த வல்வெட்டித்துறையும். அங்கும் வல்வை நெடியகாட்டு மோர்மட வரவேற்புக்குழு மற்றும் இளைஞர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு அங்கு உள்ள விளையாட்டுக்குழுக்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் இந்த இந்திரவிழா மிக சிறப்பாக நடைபெறுகின்றது. விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான 'இந்திர விழா' மறுநாள் அதிகாலைவரை நடைபெறும்.


இந்திர விழா 2018 

கடலில் அமைக்கப்பட்ட மேடை 
நாங்களும் இந்திர விழாவினை காணும் எண்ணத்தோடு மாலை சாவகச்சேரியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தோம்,  நண்பன் துஷாந்தன் மற்றும் அவனது சகாக்களின் கூட்டில் நானும் இணைந்து பின் ஆரம்பமான மோட்டார் சைக்கிள் பயணம், நெல்லியடி ஊடாக, வதிரி, திக்கம் போன்ற ஊர்களை கடந்து கடற்கரை வீதியினை அடைந்தோம், சிறிது தூரம் சென்று எமது மோட்டார் வண்டிகளை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம்,

ஆரம்பத்தில் இருந்து ஆலயம் வரை மூன்று கிலோமீற்றர் தூரம் உள்ள தெருக்கள் எங்கும் மின்விளக்குகளினாலும், சுழலும் மின்னொளிகளாலும் அலங்கரிக்கப்பட்டு, வாழைகள் மூங்கில்கள், கட்டவுட்டுகள், வளைவுகள், தாகசாந்தி நிலையங்கள், கடைகள் என வீதிகளும். நிகழ்ச்சிகள், கோஸ்டிகள், இசைக்கச்சேரிகள் என வல்வையும் சனக்கூடங்களினால் நிறைந்திருந்தது, கலை நிகழ்வுகளுக்காக பத்து அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. மற்றும் கண்கவர் வானவேடிக்கைகளும் புகைக் குண்டுகளுமாக ஆரவாரமாக ஊரே களைகட்டி நின்றது. கணபதி மின் அமைப்பாளர்களின் பல மின்பிறப்பாக்கிகள் வீதிகளை அழகாகியது.

 கட்டவுட் கடவுள்கள் 
இதில் குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவெனில், கடல் பகுதியில் அமைக்கப்பட்ட கச்சேரி மேடைகள், வீதியின் கீழ் பகுதியினுடாக மக்கள் பயணம் செய்ய அதன் மேல் மேடை அமைக்கப்பட்ட இசைக்கச்சேரிகள் , கோவில் வீதியில் சாக்ஸபோன் சகோதர்களின் இசை நிகழ்வுகள் மற்றும் நடன நிகழ்வுகள் நிகழ்த்தபட்டதும் தான். இது தவிர பேயாட்டம், புலியாட்டம், காமதேனு, பறவைகள் போல் வேடமிட்ட மனிதர்கள் சிறுவர்களை மட்டும் அல்ல எங்களையும் வியப்பில் ஆழ்த்தினர், வீதியோரங்களில் அம்மன், பிள்ளையார், சிவன், கிருஷ்ண கட்டவுட்டுகள் என்பன அதன் உயரங்கள், மின் அலங்காரங்கள் என்பன ஆச்சரியமூட்டிட தவறவில்லை.

பிரதேச வைத்தியசாலை, கணபதி படிப்பகம், கூடுகளில் பறவைகள், பிள்ளையார் கோவில், கேணிகளில் வாத்து, தொடர்ந்து நடந்து செல்லும்போது எண்கோண மடம் ஒன்றை கடக்க நேரிடும் அவ்விடத்தில் தான் சிறிய புகைக்குண்டுகளினை வானில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். வானில் பலவித வண்ணங்களில் ஆடி அசைந்து தீப்பந்தத்துடன் செல்லும் காட்சியை காண அழகாகத்தான் இருக்கும்,

வண்ண புகைக்குண்டு
முன்னையாகாலத்தில் கடல் கடந்து வணிகத்திற்கு சென்றவர்கள், பாய்மரக்கப்பலில் வரும்போது வானில் ஒரு பொருள் வருவதை அவதானித்து, அதை பின்தொடர்ந்து சென்று அதனை நெடியக்காட்டிற்கு கொண்டு வந்ததாகவும், கடதாசியில் ஒட்டப்பட்ட அது எரிந்த தீப்பந்தம் ஒன்றை இணைத்திருந்ததாகவும், அதை ஆராய்ந்து பின் அதுபோல செய்து ஒவ்வொரு வருடமும் முத்துமாரி அம்மனின் தீர்த்த திருவிழாவில் விட முடிவெடுத்ததாகவும் அங்குள்ளவர் ஒருவர் குறிப்பிட்டார், ரிசு பேப்பரில் ஆரம்பத்தில் ஒட்டப்பட்டு, இப்பொது ஒருவகை கடதாசியில்  20, 40, 50, 60, 80 அடி என நீண்டு இந்த முறை புதிய சாதனைக்கு தயாரானது இந்திரவிழா.

100 அடி புகைக்குண்டு தயார்நிலையில்.
பிள்ளையார் கோவில் வீதியில், 100 அடியில் தயாரான புகைக்குண்டு வானுக்கு செலுத்த தயார் செய்யப்பட்டது. ஆனால் துரதிஷ்ட வசமாக அது தொழில்நுட்ப கோளாறினால் செயலிழந்து விட்டது. தொடர்ந்து 60அடி புகைக்குண்டு உடனடியாக ஏவப்பட்ட தயாரானது. அவ்விடத்தில் நேரம் இரவு 10.30 இனை கடந்திருந்தாலும், சலிப்போ அலுப்போ தெரியவில்லை. 10 மற்றும் 8 அடிகளிலும் சிறிய புகைக்குண்டு ஏவப்பட்டது. பகல் வேளையிலே 40 அடியில் ஒன்று ஏவப்பட்டதாக பேசிக்கொண்டார்கள்.

இவ்வறான புகைக் குண்டுகள் யாழின் வேறு எப்பகுதியிலும் விடப்படுவதில்லை, புகைக்குண்டு கட்டும் கலைஞர்கள் வல்வையில் மட்டுமே வாழ்கின்றனர், அதற்கு என்று பிரத்தியேக மண்டபமும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னைய காலத்தில் வானவேடிக்கைகள் மட்டுமே இந்திர விழாவினை சிறப்பித்தது. அந்த வானவேடிக்கைகள் அதிகமாக வல்வையிலேயே தயாராகுமாம். மேலதிகமாக அளவெட்டியில் இருந்தும் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகின்றது. வானவேடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகளாலே தான், பின்னர் வந்த காலத்தில் புகைக்குண்டுகள் பிரபலமாயின, போராட்ட வரலாற்றிலும் புகைக்குண்டுகளின் பங்கு பின்னர் வந்த காலத்தில் இருந்தது என்றால் மிகையாகாது.

அம்மன் வேடம் அணிந்த ஆண்கள்
இவைகளெல்லாம் நிகழ்வுகளாய் கடந்து போக சம்பிரதாய நிகழ்வும் ஆங்காங்கே நடந்தவண்ணம் இருந்தது, ஆண்கள் அம்மன் போல வேடம் பூண்டு உடுக்கு அடித்த வண்ணம் வேப்பிலைகளை கொண்டும், கரகம் போன்ற ஒன்றை சுமந்தவாறு தெருவெங்கும் ஆடியவாறு கோவிலை நோக்கிச் சென்றனர்.

தொடந்து வல்வெட்டித்துறை நகர், சந்தை, மாதிரி பாய்க் கப்பல், அன்னபூரணி கப்பல் வரலாறு, அமெரிக்கா சென்ற சான்றுகள் கூறும் படங்கள், மற்றும் படத்திருவிழாவில் ஏற்றப்பட்ட படங்கள் என எங்கும் மின்னொளியில் பிரகாசித்தது. முத்துமாரி அம்மன் கோவில் தெடர்ந்து, எம்.ஜி.ஆர் சதுக்கத்தினை மின்னொளியில் பார்க்கையில் அழகாகத்தான் இருந்தது, அந்த சிலையில் இன்னமும் உயிர் இருப்பது போலவே தோன்றும். தொடர்ந்து சிதம்பரா கல்லூரி, மைதானம் என்பவற்றுடன், அங்காங்கே கடைகள், கரும்சுண்டல் வண்டிகள், மாங்காய் உப்பு,தூள் கடைகள், கச்சான் கடைகள், ஐஸ் கிறீம் வான்கள் என்பன எம்மைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. பெரும்பாலோரின் நேரங்களை செலவு செய்துகொண்டிருந்தது இந்திரவிழா.

மாங்காய் வியாபாரம் 
இந்திர விழா பலருக்கு வாழ்வாதாரங்களை கொடுத்தாலும், இவ் இந்திர விழா தொன்மங்களை பறைசாற்றிக் கொண்டாலும். வல்வையின் புகழை நிலைநாடிச்சென்றாலும், எனக்கு இருக்கும் கேள்விகள் இந்த இரவுகளின் இருண்மைகளில் இருந்தே தோற்றம் பெறுகின்றது. இந்த நீண்ட மூன்று கிலோமீட்டர் வீதிகளும். இதில் பயணம் செய்த மக்களும் நிறைய விடையங்களை கற்பித்தே கடந்து சென்றார்கள். 

இந்த வீதிகளின் இருமருங்குகளும், விசேட தேவை உடையோர், அங்கவீனர்கள் தட்டுக்களோடு இருந்தார்கள். கால்கள் இல்லாத ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்தார், ஒரு ஐயா மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட கையுடன் இருந்தார், பசியோடு சில வயோதிபர்கள் இரந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் தட்டுகள் நிறைந்திருக்கவில்லை,

சிறுவர்கள் சிலர் கச்சான் வியாபாரங்களிலும், சிறிய விளையாட்டு பொருள் விற்கும் கடைகளுடனும் தங்கள் வருமானத்திற்காய் காத்திருக்கிறார்கள்.அவர்களது பொருட்களும் அப்படியே இருந்தது, பெண்களும், வயோதிப மாதுகளும் கச்சான் மேசைகளின் பின் நள்ளிரவு ஒரு மணியினை கடந்தும் நின்றுகொண்டிருக்கிறார்கள். கனத்த மனதுடன் நாங்களும் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சிறுவர் கச்சான் வியாபாரத்தில் 
கொண்டாட்டங்கள் தவிர்க்க முடியாது தான், ஆனால் ஒரு தொண்மையான நிகழ்வு, வரலாறாகவேண்டும் எனில், சொல்லிக்கொள்ளும் படி எதாவது நடக்கவேண்டும். பத்து மேடைகள், மூன்று கிலோமீட்டர் சோடனைகள் என விளம்பரம் செய்யும் போது விழாச்செலவிலே குறைந்தது நூறுபேருக்கு ஏதாவது சேவைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். அதுக்கும் இவ் நிகழ்வினை பறைசாற்றும், எனக்கு தெரிந்த சில கோவில்களில் முன்னர் உபயக்காரர்களின் போட்டியில் வேறு வேறு பண அளவுகளில் கச்சேரிகள் நடக்கும், கடந்த திருவிழாவில் ஒரு உபயகார் அந்த செலவில் மாணவர்களுக்கு நிறைந்த உதவி புரிந்ததாக பார்த்தேன், உண்மையில் அது ஒரு முன்மாதிரியான செயற்பாடு.

அது போல் இந்திர விழா வெற்றி விழாவாக வேண்டுமெனில், யாரும் கைநீட்டிடாத தெருக்களில் நடக்கவேண்டும். நான் கடந்த சிறுவர்கள், எங்களோடு நடந்து ரசிக்கவேண்டும். பசி கொண்ட ஏழையின் வயிறுகள் நிறையவேண்டும். 

மேலும் எம் பழமை வாய்ந்த இந்த விழாவில், சினிமா பாடல்களை தவிர்த்த இசைக்கச்சேரிகளும் அரங்கேற்றப்படலாம். சினிமா பாடலுக்கான நடனங்களை தவிர்த்து. எமது பாரம்பரியங்களினூடு பயணிக்கலாம். அறிவுகளை கூடும் நிகழ்வுகளை அரங்கேற்றலாம், சிலம்பாட்டம், பொம்மலாட்டங்கள் போன்ற எமது பண்டைய நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டால். மேலும் எமது வரலாறும். புதுப்பிக்கப்படும். அதுவரையில் இது பாதி ஆடம்பரமே.

மேலதிக தகவல்கள் valvettiturai.org, மற்றும் வல்வை நண்பர்கள்.

-தமிழ்நிலா-


இக்கட்டுரை தீபம் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


http://www.deepamtv.asia/srilanka/northern-province/valvai-big-historical-indira-villa-2018/
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா